சென்னை: கோடநாடு வழக்கு  விசாரணை அதிகாரி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது ஏ.டி.எஸ்.பி முருகவேலை விசாரணை அதிகாரியாக தமிழகஅரசு நியமனம் செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான  எஸ்டேட் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கோடநாட்டில் உள்ளது. இங்கு ஜெ.மறைவுக்கு பிறக கடந்த  2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்த வழக்கின் விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, திமுக அரசு, கோடநாடு வழக்கை மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து, விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

அதன்படி, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து 230-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு திடீரென செப்டம்பர் மாத இறுதியில் சாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.  சிபிசிஐடி டிஜிபி முகமது ஷகில் அக்தர் தலைமையிலான அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர். முன்னதாக, எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட இடத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், எஸ்டேட்டின் மேலாளர் நடராஜ், பணியாளர்கள், சம்பவம் நடந்த தினத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் ஆகியோரிடம் 26ந்தேதி அன்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில்,  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி முருகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   கோடநாடு வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளனர். கோடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் கொலை நடைபெற்ற இடத்தில் மீண்டும் நேரில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.   மேலும் கோடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது இல்லத்திற்கு சென்று விசாரிக்க உள்ளதாகவும், கனகராஜ் வாகன விபத்து தொடர்பாக சேலத்தில் விசாரணை செய்ய முடிவு செய்யபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.