சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான மணல் காண்டிராக்டர் ஆறுமுகத்தின் மகன் செந்தில் குமாரிடம் 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை நடைபெற்றது. தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர். இவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கை திமுக அரசு, ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறது. இந்த அணியின்ர் ஏற்கனவே 220 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில் குமாரிடம் தனிப்படை போலீசார் நேற்றுமுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக செந்தில்குமார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.அதையடுத்து, அவர் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக செந்தில்குமாரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே செந்தில்குமாரின் சென்னை ஷைலி நிவாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையிலேயே விசாரணை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றவர் ஆறுமுகசாமி; அதிமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தவராகவும் கூறப்படுகிறது.