சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், 4ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குரல் எழுப்பி உள்ளார்.
என் தெய்வம் குடியிருந்த வீட்டில் கொலை நடைபெற்றுள்ளது குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என திடீரென குரல் எழுப்பி உள்ளார். கடந்த 4ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து வந்தவர், தற்போதுதான் தூங்கி விழித்துள்ளார் போல என சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகே, சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்பு விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழிலில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, அதிமுக எடப்பாடி கட்டுப்பாட்டில் செல்லும் நிலை எழுந்துள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளராக கருதப்படும் மருது அழகுராஜ், கொடநாடு கொலை வழக்கில் இபிஎஸ் மவுனம் காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, ஓபிஎஸ் மகன், ஜெயபிரதீப் தற்போது கொந்தளித்துள்ளார்.
இதுதாடர்பாகஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், உண்மை ஒருநாள் வெல்லும் கொடநாடு சம்பவம் பற்றி நான்கு வருடமாக நான் எதுவும் பேசவில்லை என்று சில நண்பர்கள் கூறியிருக்கிறார்கள் அவர்களுக்கு தகுந்த விளக்கத்தினை நான் கூற கடமைப்பட்டிருக்கிறேன். எங்களது தெய்வம் குடியிருந்த கோயிலான பங்களாவில் சம்பவம் நடந்த ஆண்டு அதிமுக ஆட்சி புரிந்து கொண்டிருந்தது மூன்று ஆண்டுகள் நல்லதொரு தீர்ப்பு வரும் என்று பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன் . அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது அடுத்த அரசாங்கம் இந்த வழக்கை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்குவார்கள் என்று அமைதியாக காத்துக் கொண்டிருந்தேன் . இரண்டு தினம் முன்பு தனியார் தொலைக்காட்சியில் நடந்த கொடநாடு சம்பவத்தைப் பற்றிய தொகுப்பை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய என்னுடைய பதிவில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. மற்றவர்கள் மீது சந்தேகப்படுவதற்கு நான் காவல்துறையும் இல்லை பத்திரிக்கையாளரும் இல்லை சாதாரண மக்களின் ஒருவன் . ஒன்றரை கோடி தொண்டர்களையும் தனது பிள்ளையாக கருதிய எனது தாய் வீட்டில் இந்த அநீதி நடந்திருக்கிறது இதற்கு நியாயம் கேட்க எங்கள் அம்மாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது. இந்த கொடநாடு சம்பவத்தை காலதாமதம் செய்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது. நமது கட்சிக்கு மேலும் கலங்கப்படுத்தாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் .இந்த வழக்கை விரைவாக முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கழக உண்மை தொண்டனின் எண்ணத்தை தான் நான் பதிவிட்டு உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.
கடந்த 4ஆண்டுகளாக எடப்பாடியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அதிகாரம் அனுபவித்து கூட்டுக்கொள்ளை அடித்து வந்த ஓபிஎஸ் குடும்பத் தினர், இதுவரை (4 ஆண்டுகளாக) கொடநாடு கொலை கொள்ளை குறித்து கேள்வி எழுப்பாத நிலையில், தற்போது ஓபிஎஸ் மகன் கேள்வி எழுப்பி உள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
ஜெயபிரதீப் கடந்த 4 ஆண்டுகளாக எங்கே இருந்தார்?, தூங்கிக்கொண்டிருந்தாரா அல்லது அவரது தந்தையார் போல எங்காவது தர்மயுத்தம் என கூறி மவுன விரதம் இருந்தாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.