நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில்   கொலை, கொள்ளை நடைபெற்றது. அப்போது காவலாளி ஒருவர் மரணமடைந்த நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக,  ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 230க்கு மேற்பட்டோர் இடம் விசாரணை நடைபெற்றது. மேலும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக இன்று, சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவரும், டிடிவி தினகரனின் நண்பருமாகிய நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதியம் ஒரு மணி அளவில் ஆஜரான வழக்கறிஞர் செந்திலிடம் தனிப்படை போலீசார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.