குன்னூர்: இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த கோடநாடு வழக்கு காவல்துறையினர் அவகாசம் கோரியதால், அக்.29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில், அவரது மரணத்துக்கு பிறகு நடைபெற்ற கொலை, கொள்ளை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில், அப்போதைய முதல்வர் எடப்பாடிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை, கொள்ளை தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் மனோஜ் தவிர மற்ற அனைவரும் ஜாமினில் வெளியே வந்ததால், இவ்வழக்கில் மறு விசாரணை கோரப்பட்டது. இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேல் விசாரணை நடத்த வேண்டி போலீசார் தரப்பில் 4 வார கால அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 40க்கும் மேற்பட்டவர்கள், 10 காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அதையடுத்து, மறு விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, விசாரணையின் போது பதிவு செய்த தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் 6 பேரிடம் மட்டுமே புலன் விசாரணை நடத்தப்பட்டுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கூடுதல் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை வருகிற 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.