சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு  நிர்வாக தோல்வி அடைந்துள்ளது. அந்த தோல்வியை மறைக்கவே  அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகிறது என்று, தமிழக ஆளுநரை சந்தித்து முறையிட்ட பிறகு இபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

கொடநாடு கொலை, கொள்ளை விவரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே இந்த விஷயத்தில் பல்வேறு யூகங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக பெருந்தலைகள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர்கள் ஆஜரானதும் சந்தேகத்திற்கிடமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. தற்போது திமுக ஆட்சி பதவிக்கு வந்ததும், குற்றவாளியை மீண்டும் விசாரணைக்கு அழைத்து காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றதும், குற்றவாளி ஒரு தரப்பினரை குற்றம் சாட்டும் வகையில் கூறியதும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்ததால், எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், துணைஎதிர்க்கட்சித் தலைவர் ஓபிஎஸ் உள்பட அதிமுக முக்கிய நிர்வாகிகள் இன்று காலை 11.30 மணி அளவில் கவர்னர் பன்வாரிலைலை சந்தித்து பேசினார். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது திமுக அரசுமீது, 5 பக்க புகார் மனுவை அளித்தனர். அதில், தி.மு.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பின்னர் கவர்னர் மாளிகை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளதாகவும்,  ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் என்று திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

ஸ்டாலின் அரசு 100 நாட்களில் வசூல் செய்வதில் மட்டுமே சாதனை படைத்துள்ளது. உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்களை பணியிடமாறுதல் செய்தது தான் திமுக அரசின் சாதனை என்றார்.

2006-2011 திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதான வழக்குகளை முடிப்பதில் தீவிரம் காட்டுகிறார்களே தவிர மக்கள் நலப்பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை என்றும், தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடங்கியுள்ளது என்றும்கூ றினார்.

கொடநாடு கொலை வழக்கில் மறுவிசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரச, தேர்தல் வாக்குறுதியாக கொடநாடு வழக்கு மறு விசாரணை செய்யப்படுவதாக முதலமைச்சர் கூறுகிறார். அதை  ஏற்க இயலாது என்று கூறியதுடன், கொடநாடு வழக்கில் இறுதி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மறுவிசாரணை ஏன்?  கேரளாவை சேர்ந்த குற்றப்பின்னணி கொண்ட சயான் உள்ளிட்டவர்களுக்கு திமுக ஆதரவு அளிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், சயான் உள்பட கொடநாடு  குற்றவாளிகளுக்கு திமுக வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர், நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் சயானிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

“கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவது பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை. கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் முறைகேடு உள்ளது. எண்ணிக்கையை மறைக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் வீடு ,வீடாக சென்று காய்ச்சல் சளி பரிசோதனைகளை நடத்தினோம்.

நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறிய திமுகவினர் குறித்து பேரவையில் நான் கேள்வி எழுப்பினேன். நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தீர்ப்பு கூறி விட்டது. திமுக பொய்யான வாக்குறுதி தந்துள்ளது.

திமுக அரசின் 100 நாட்களில் சாதனையல்ல சோதனை, வேதனை தான் அதிகம். திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என்று கூறினார்.

கொடநாடு விவகார வழக்கு விசாரணை மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவர்னரிடம் அதிமுக அளித்த புகார் மனு:

AIADMK Ptn to Gov Press Copy 19 8 2021