பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் இதயத்திற்குச் செல்லும் இடது முக்கிய தமனியில் இருந்த அடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் எனும் ‘கேகே’ மே 31ம் தேதி இரவு கொல்கத்தாவில் உள்ள நஸ்ருள் மஞ்சா அரங்கத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியபோது மாரடைப்பால் மரணமடைந்தார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த குருதாஸ் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி கொல்கத்தா பெருநகர வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான நஸ்ருள் மஞ்சா அரங்கத்தில் நடைபெற்றது.

2700 முதல் 3000 பேர் வரை மட்டுமே அமரக்கூடிய இந்த அரங்கில் படிகளிலும் பக்கவாட்டிலும் நின்றுகொண்டும் அமர்ந்துகொண்டும் சுமார் 6000 பேர் ‘கேகே’ வின் நிகழ்ச்சியைக் காண குவிந்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டுமடங்கு அதிகப்படியான பார்வையாளர்கள் உள்ளே நுழைந்ததால் இங்குள்ள குளிர்சாதன வசதி போதவில்லை என்றும் அதனால் அரங்கத்தில் காற்று சுழற்சியின்றி மூச்சு திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நீண்ட நேர நிகழ்ச்சி காரணமாக மூச்சு திணறலால் அவதிப்பட்ட பாடகர் ‘கேகே’ காற்றோட்டம் இல்லை என்று மேடையில் இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறினார். தனது நிகழ்ச்சி முடிந்ததும் வேகவேகமாக வெளியேறிய கேகே தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு மேலும் மூச்சு திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

https://twitter.com/Omnipresent090/status/1531762445731016706

இதனைத் தொடர்ந்து அவரது உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லும் முன் கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் நேற்று உடற்கூறாய்வு நடைபெற்றது.

கேகே-வின் உடற்கூறாய்வு மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவர் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, கேகே-வின் இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பல்வேறு இடங்களில் அடைப்பு இருந்ததாகவும் அதிகப்படியாக 80 சதவீத அடைப்பும் மேலும் சில சிறு சிறு அடைப்புகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இடது முக்கிய தமனியில் பெரிய அடைப்பு இருந்ததாக கூறிய அவர் மூச்சு திணறல் ஏற்பட்ட உடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால் சி.பி.ஆர். முறை மூலம் அவரை காப்பாற்றி இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

 

ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்ததாலும் உணர்ச்சி மிகுதியால் ரத்த ஓட்டம் சீராக இல்லாத நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டதும், மருத்துவமனைக்கு தாமதமாக வந்ததாலும் அவரது உயிர் பிரிந்ததாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிறந்து வளர்ந்த ‘கேகே’ 1996 ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் இந்தி மற்றும் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகராக அறிமுகமானார். கிருஷ்ணகுமார் குன்னத்-தின் பெற்றோர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

53 வயதே ஆன கேகே-வுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மாரடைப்பால் திடீர் மரணமடைந்த கேகே-வின் உடல் மும்பையில் இன்று தகனம் செய்யப்பட்டது.