சென்னை:  முதலாளி வர்க்கத்துக்கு எடுத்துக்காட்டாக மென்பொருள் நிறுவனம் ஒன்றில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஊழியர்கள் 5 பேருக்கு ரூ.1கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. சொகுசு கார் பரிசு வழங்கி கவுரவித்துள்ளது பிரபல  மென்பொருள் நிர்வாகம். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பல நிறுவனங்களில் குறிப்பிட்ட சில ஆண்டுகள் பணியாற்றினாலே, அவர்கள் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூறி, அவர்களை வேலையில் இருந்து நீக்குவதிலேயே பெரும்பானலா மென்பொருட்கள் நிறுவனங்கள் மட்டுமின்றி அனைத்து வகையான தனியார் நிறுவனங்களும் ஊடக நிறுவனங்களும் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. ஒரே நபர் பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினால், அவர்களுக்கு ஊதிய உயர்வு உள்பட பல்வேறு சலுகைகள் வழங்க வேண்டும் என்பதை தவிர்க்கும் வகையிலேயே பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன.

ஆனால், முதலாளி வர்க்கத்துக்ககே  முன்னுதாரமாக திகழ்ந்துள்ளது, பிரபல மென்பொருள் நிறுவனமான ‘கிஸ்ஃப்ளோ’ நிறுவனம். சென்னையை  தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், தனது 10வது ஆண்டு விழாவை நந்தம்பாக்கம் டிரேடு சென்டரில் விமரிசையாக கொண்டாடியது.

அப்போது, தனது நிறுவனத்தில், நீண்ட நாள் பணியாற்றி, நிறுவனத்தின் வெற்றிக்கு பங்காற்றியதற்காக,  ஊழியர்கள் 5 பேருக்கு தலா ரூ. 1 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. காரை பரிசாக வழங்கி கவுரவித்திருக்கிறது அந்த நிறுவனம்.

நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், நிறுவன ஊழியர்களான மூத்த தயாரிப்பு அலுவலர் தினேஷ் வரதராஜன், தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் கௌசகிராம் கிருஷ்ணசாயி, பொறியியல் பிரிவு இயக்குனர்கள் விவேக் மதுரை, ஆதி ராமநாதன் மற்றும் துணை தலைவர் பிரசன்னா ராஜேந்திரன் ஆகிய ஐந்து பேருக்கும் நிறுவனர் சுரேஷ் சம்மந்தம் 5 பி.எம்.டபிள்யூ. கார்களை பரிசளித்து கவுரவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய மென்பொருள் நிறுவன நிர்வாகி, குறிப்பிட்ட 5 பேரும், தனது மென்பொருள் நிறுவனம் தொடக்கம் முதலே இவர்கள் என்னுடன் இருந்து வருகின்றனர்,  என்னுடைய கடின காலத்திலும் இருந்துள்ளார்கள். அவர்களின்றி நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. அதனால்தான் அவர்களை கவுரவப்படுத்த விரும்பியதாக கூறியவர், எனக்கு தெரிந்த வரையில்,  விலையுயர்ந்த காரைவிட மிகப்பெரிய பரிசு இருப்பதாகதெரியவில்லை. அவர்களது உழைப்புக்கான மிகச்சிறிய அங்கீகாரமே இந்த பரிசு என்று கூறியுள்ளார்.

இந்த விலைஉயர்ந்த பரிசு, குறிப்பிட்ட அந்த ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படாமலேயே சர்ப்பிரைசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.