சண்டிகர்
மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் அறிவித்துள்ளார்.
விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு 2 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியதில் எவ்வித உடன்பாடும் எட்டவில்லை. அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்காமல் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.) உறுதி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வர முடியாது என மத்திய விவசாயத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்திருந்தார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகப் பாரதிய கிசான் சங்கம் சங்கத்தின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம்,
“விவசாயிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அதை ஏற்கவில்லை என்று கூற்றுக்கு இடம்கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
சண்டிகரில் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும். எங்களுக்குப் பேச்சுவார்த்தை தொடர்பான அழைப்பு எதுவும் வரவில்லை. மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நிச்சயம் செல்வோம்”
என்று தெரிவித்தார்.