சென்னை: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, அதுகுறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. இதில், கடலூர் மாவட்டத்தில் அதிக அளவிலானமுறைகேடுகள் நடைபெற்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது.  போலி பயனாளிகளின்  வங்கிக் கணக்கிலிருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. சேலத்தில் 13ஆயிரம் பேரின் கணக்குகள் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும், பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில், தமிழகத்தில், விவசாயி கள் அல்லாத போலி  பயனர்கள் சேர்க்கப்பட்டு முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு  குறித்து வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ,  13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தல் உள்ள உறுப்பினர்கள் குறித்து ஆய்வு செய்யவும், ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்களை உடனே  தெரிவிக்கவும் உத்தரவிட்ட நிலையில்,முறைகேடாக சேர்ந்து இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை உடனடி யாக திட்டத்தில் இருந்து நீக்கவும்   உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி  கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயி அல்லாதோர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது.
முதல் கட்டமாக, பிரதமரின் விவசாய திட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்ட சுமார் 37 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.  அவர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வில்,  இதர மாவட்ட விவசாயிகள், விவசாயிகள் அல்லாத 68 ஆயிரம் பேரின்  பெயர் பதிவேற்றம் செய்து நிதியுதவி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இதுவரை 13 ஆயிரம் பயனாளிகளின்  பெயர், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆயிரம் பெயர் பதிவுகள் ஆய்வு முடிந்த பின் அறிக்கையை கலெக்டருக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் விவசாயிகள் பெயரில் நடைபெற்ற இந்த முறைகேடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தமிழ்நாட்டுக்கு இந்திய அளவில் தலைகுனியை ஏற்படுத்தி உள்ளது.