சென்னை: பிரதமரின் கிசான் உதவி திட்டத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் முறைகேடு நடை பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ள நிலையில், போலி பயனர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் லட்சக்கணக்கான போலி பயனர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் நிதி திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில், தமிழகத்தில் பெரும் முறைகேடு நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தது.
கடலூர் மாவட்டத்தில் 37ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்…
இதையடுத்து, இதுகுறித்து 13 மாவட்டஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய வேளாண்மைத் துறை முதன்மைச் செயலா் ககன்தீப், ஆட்சியர்கள் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தனி குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
விசாரணையில், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்பரம் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு, போலி பயனர்களை அதிரடியாக நீக்கி, கோடிக்கணக்கான ரூபாய் பணமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 11,200 போலி பயனர்கள்.. ரூ.4.48 கோடி வசூல்!
இந்த நிலையில், தற்போது பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் 2லட்சம் பேர் போலி.. ரூ.5.60 கோடி வசூல்!
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1.51 லட்சம் விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். பின்னர் கடகடவென பதிவர்கள் எண்ணிக்கை கூடியது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக திருச்சி மாவட்டத்தின் 15 வட்டங்களில் ஆய்வு செய்தனர். அப்போது வெளி மாவட்டத்தினர், விவசாயிகள் அல்லாதோர் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம்:
இதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் 1,700 பேர், 2 தவணைகளில் ரூ.68 லட்சம் முறைகேடாக நிதி உதவி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொய்யான தகவல் அளித்து முறைகேடாக நிதி உதவி பெற்றவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுட்டுள்ளனர். மேலும், இதுவரை ரூ.11 லட்சம் வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மான் உதவித்திட்டத்தில் 1500 போலி விவசாயிகள் சேர்க்கப்பட்டு அவர்கள் பயன் பெறுவதை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையிலான ஆய்வுக்குழு விசாரணை நடத்திக் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 8 வாரத்தில் மட்டும் கரூர் மாவட்டத்தில் 78 ஆயிரத்து, 517 விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். அதில், 1,500 பேர் முறைகேடாக பணம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் இரண்டு தவணைகளில் ரூ. 60 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக அதிகாரிகள், முகவர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மோசடி தொடர்பாக சிபிசிஐடி விசாரணையும் தொடங்கி உள்ளது.