மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தை இயக்கினார்.
தற்போது தனது புதிய படத்துக்கான கதை, திரைக்கதையை முடித்துத் தயாராகிவிட்டார் கிருத்திகா உதயநிதி. இந்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக இந்தப் படத்தின் அறிவிப்பு ட்விட்டர் தளத்தில் உள்ள ஸ்பேசஸில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் நாயகனாக காளிதாஸ் ஜெயராம், நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணிபுரியவுள்ளார்.
நல்ல ஒரு கதைக்காக காத்திருந்ததாக கூறியிருக்கும் கிருத்திகா, “இது வாழ்வின் பயணத்தை பற்றிய கதை. பயணம் இந்தப் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும்” என தெரிவித்துள்ளார். விரைவில் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை அறிவிக்கயிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.