டில்லி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர் ஜப்பானில் சிறை தண்டனை பெற்றதால் ஐபில் விதிகளால் அந்த அணி பாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான நெஸ் வாடியா பாம்பே டையிங், பிரிட்டானியா உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் வாடியா குழுமத் தலைவர் மகன் ஆவார். இவர் ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். இவர் கடந்த மாதம் தனது விடுமுறையை கழிக்க ஜப்பான் சென்றார்.
அங்கு விமான நிலைய சோதனையில் நெஸ் வாடியா தனது சட்டைப்பையில் போதை மருந்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனது சொந்த உபயோகத்துக்காக அதை எடுத்துச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். அதை ஜப்பான் காவல் துறையினர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் மீது வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிமன்றம் நெஸ் வாடியாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அளித்தது.
ஐபிஎல் விதி எண் 14 பிரிவு எண் 2 இன் படி எந்த ஒரு ஐபிஎல் உரிமையாளர் அல்லது பங்குதாரர் சட்டவிரோதமான செயல்களை புரிந்து தண்டனை அறிவிக்கப்பட்டு இருக்க கூடாது. அந்த தண்டனை மூலம் அணியின் செல்வாக்கு பாதிக்கபடலாம் என்பதால் இந்த விதி உண்டாக்கப்பட்டுள்ளது. அந்த குற்றம் விளையாட்டு தொடர்பாக இல்லை எனினும் இந்த விதி பொருந்தும்.
இவ்வாறு தண்டனை பெறுவோருக்கு சொந்தமான அணி குறித்து பிசிசிஐ நடுவர் தீர்ப்பாயத்திடம் புகார் அளிக்க வேண்டும். அவர் அதை ஆராய்ந்து அந்த அணையை ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக்கி வைப்பார். இந்த விதிமுறையின் காரணமாக ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலக்கி வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பிசிசிஐ உறுப்பினர் ஒருவர், “இந்த தீர்ப்பு வந்து 24 மணி நேரத்துக்கும் மேலாகி உள்ளது. ஐபிஎல் விதிகளின்படி இவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டால் பிசிசிஐ தலைமை அதிகாரி உடனடியாக புகார் அளித்து நடுவர் தீர்ப்பாயத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய தலைமை அதிகாரி ராகுல் ஜோக்ரி இது குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.