விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கிழவனேரி எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டில் அக்கால வணிகர் சமூக கூட்டமைப்பு பற்றிய குறிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.பி.கே. கல்லூரியைச் சேர்ந்த வரலாற்று துறை மாணவர்கள் உதவி பேராசிரியர் விஜயராகவன் தலைமையில் மதுரைக்கு அருகில் உள்ள இந்த பகுதியில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
பாண்டிய மன்னர்களிடம் இருந்து கைப்பற்றிய இந்த பகுதியை நிர்வகிக்க ராஜா ராஜ சோழன் தனது மகன் சதயவர்மன் சுந்தர சோழன் எனும் ராஜேந்திர சோழனை மதுரை மண்டலத்தின் சிற்றரசனாக நியமித்தது இங்குள்ள குறிப்புகளில் உள்ளது.
ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு என்று கூறப்படும் இந்த கல்வெட்டுகளில் அக்கால வணிக குழுக்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன, இந்த வணிக குழுவிற்கு ‘ஞானதேசிகர்’ என்று பெயர் இடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
‘ஞானதேசிகர்’ எனும் இந்த வணிகர் குழுக்களுக்கு பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் வீரப்பட்டினம் என்ற இடத்தில் அமைந்திருந்த கோயிலில் உள்ள விளக்கு அணையாமல் தினமும் ஏற்றி வருவதும் இவர்களது கடமையாக இருந்துள்ளது.
இதே போன்றதொரு கல்வெட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி-யிலும் இருப்பதாக கூறும் இந்த ஆய்வுக் குழுவினர், வீரப்பட்டினம் என்ற பெயரில் இந்த சுற்றுவட்டாரத்தில் எந்த கிராமமும் இருந்ததாக தெரியவில்லை என்றும் இந்த கல்வெட்டு வேறு ஏதோ ஒரு இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
கமுதி மற்றும் கிழவனேரி பகுதியில் உள்ள இவ்விரு கல்வெட்டுகளில் உள்ள குறிப்புகளை வைத்து பார்க்கும் போது சோழர் காலத்தில் வணிக குழுக்கள் இருந்ததையும் அவை சிறப்பாக செயல்பட்டதையும் அறிய உதவுவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் விஜயராகவன் கூறியிருக்கிறார்.
வளஞ்சியர், திசையாயிரத்து ஐந்நூற்றுவர் போன்ற பன்னாட்டு வணிகக் குழுக்கள் பற்றிய சோழர் கால குறிப்புகள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஞானதேசிகர் எனும் வணிக குழு பற்றிய குறிப்புகள் சோழர் காலத்து வாணிபத்தை பறைசாற்றுவதாகவே உள்ளது.