டில்லி:
ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஹுசைன்  3 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2006 ம் ஆண்டு ராணி ரானியாவுடன் அவர் இந்தியா வருகை தந்துள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக ஜோர்டான் மன்னர் இந்தியா வருகிறார்.

3 நாள் அரசுமுறை பயணமாக இன்று டில்லி வரும் ஜோர்டான் மன்னர் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.

அப்போது, இரு நாடுகளுக்கு இடையே நல்லறவு மேலும் வலுப்படும் வகையில் பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும்,   இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்களின் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள்,  வர்த்தகம், சுகாதாரம், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பற்றி இரு தரப்பினரும் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, இருதரப்பினரிடையே  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தின்போது, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மன்னர் அப்துல்லாக்கு விருந்து கொடுத்து உபசரிக்கிறார். மேலும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் ஜோர்டான் மன்னரை சந்திக்க உள்ளனர்.

இதற்கிடையில் டில்லி  ஐஐடி  மற்றும், இஸ்லாமிய பாரம்பரியம் தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், ஜோர்டான் மன்னர்  அப்துல்லாவும் பங்கேற்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜோர்டான் மன்னர் இந்தியா வருகையையொட்டி, தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.