வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் சர்ச்சைகள் இருந்து வருவது தெரிந்ததே. வட கொரியா அணு ஆயுத சோதனைகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். வட கொரியாவும் பதில் கொடுத்தது. விரைவில் வடகொரியாவுக்கு ஒரு மாபெரும் அறிவிப்பு அளிக்கப் போவதாக அதிபர் ட்ரம்ப் மிரட்டினார். அதற்கும் வட கொரியா அஞ்சாமல் இருந்தது.
தற்போது வட கொரிய பிரதிநிதிகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் சந்திப்பு நடத்தினர். நேற்று அமெரிக்க அதிபரின் அதிகார இல்லமான வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது அவர்கள் வட கொரிய அதிபர் எழுதிய கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் சந்திப்பு நடத்த விரும்புவதாக அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த தகவலை உறுதி செய்த வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பாளர் அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து சிறிது காலத்துக்கு வட கொரியா தனது அணு ஆயுத சோதனையை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் தென் கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது பற்றி வட கொரியா எதுவும் தெரிவிக்கவில்லை என கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே பல முறை வட கொரிய அதிபரை சந்தித்துப் பேச சம்மதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.