சென்னை: புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்து, கிளாம்பாக்கத்தில் கட்டுப்பட்டு வரும் தென்மாவட்டங்களுக்கான  புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப் படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கம், திருமழிசை பகுதிகளில்  புதிய புறநகர் பஸ் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிலையங்கள்  கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு  அதிமுக ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்டது.  இதைத் தொடர்ந்து அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்ற வருகின்றன.

இந்த நிலையில்,  வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 393.74 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் நாள் ஒன்றுக்கு  ரூ.1½ லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும்,  ஒரே நேரத்தில் 209 பஸ்கள், 270 கார்கள் மற்றும் 3 ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் கட்டுமானப் பணிகள் கொரோனா காலக்கட்டத்தில் முடங்கியது. பின்னர் கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கட்டுமான பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  இன்று காலை, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே. சேகர்பாபு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் ஆய்வு செய்தனர். . இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.