சென்னை: சிறுவனை கடத்தியதாக புகாரின் பேரில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி யை போலீசார் நேற்று (ஜுன் 14ந்தேதி) கைது செய்ய சென்ற நிலையில், அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேலும் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், அவரது கட்சி தொண்டர்களும் சாரை சாரையாக வந்து போராட்டதால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சி பாரம் கட்சி தொண்டர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனியை சேர்ந்த பெண் திருவள்ளூர் வாலிபரை பதிவு திருமணம் செய்துகொண்ட நிலையில், எம்.எல்.ஏ ஜெகன்மூர்த்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டதால் அவர் மீது புகார் எழுந்துள்ளது. காதல் ஜோடி விவகாரத்தில் சிறுவனை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்துள்ள நிலையில், காவல்துறையினர் அவரது இல்லத்திற்கு விசாரணைக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், களம்பாக்கத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் சமூகவலைதளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை தொடர்ந்து, இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. பெண் வீட்டில் இந்த காதலுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பெண், இளைஞரை பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத பெண் வீட்டார் தங்கள் பெண்ணை மீட்க வேண்டி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி யிடம், உதவி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த உதவியை செய்வதாக உறுதி அளித்த ஜெகன்மூர்த்தி, அந்த இளைஞரின் வீட்டுக்கு, கூலிப்படையை அனுப்பி அவரின் சகோதரரை கடத்தியதாகவும், அப்பெண்ணை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெகன் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பெண்ணின் தந்தை உட்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையில் போலீசார் பூவிருந்தவல்லி அருகே உள்ள ஆண்டர்சன் பேட்டையில் உள்ள ஜெகன்மூர்த்தி வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்த தகவல் அறிந்து புரட்சி பாரதம் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். அவரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாத வகையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஏராளமானோர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்து குவிந்தனர்.
ஜெகன் மூர்த்தியை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புரட்சி பாரதம் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் இருந்து திருவள்ளுர் செல்லும் வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபடும் புரட்சி பாரதம் கட்சியினரை கலையச் செய்ய கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து இன்று மேலும் போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெகன் மூர்த்தியை போலீசார் கைது செய்ய முயற்சித்தற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் ஜெகன்மூர்த்தியை ஸ்டாலின் மாடல் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு கைது செய்ய முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.