சென்னை : திரைப்பட நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதாவில் சேரப்போவதாக நேற்று செய்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
காங்கிரஸ் கட்சியினர்மீது அதிருப்தியில் இருந்து வந்த குஷ்பூ சமீப காலமாக காங்கிரஸ் கட்சியில் தீவிர செயல்பாடுகளில் ஈடுபடாமல் ஒதுங்கியும் இருந்தார். அவ்வப்போது மோடி அரசுக்கு பாராட்டுச்சான்றிதழும் வழங்கி வந்தார். இதனால், அவர் பாஜகவில் இணையலாம் என்ற கருத்து பரவி வந்தது.
இதற்கிடையில் கடந்தவாரம் ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து புரசையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதனால், அவர் பாஜகவில் சேர வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. அவரும், பா.ஜ.க.வில் சேரப்போவதாக இருந்தால் நான் ஏன் இந்த போராட்டத்தில் பங்கேற்று இருக்க வேண்டும்?’’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
ஆனால், நேற்று அவர் திடீரென தனது கணவர் சுந்தருடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில், காவி உடையுடன், மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அவர் பாஜகவில் ஐக்கியமாவது உறுதியானது.
குஷ்பூ, டெல்லியில் ஜேபி நட்டா முன்னிலையில் இன்று மதியம் 1 மணிக்கு பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது.
இந்தி நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது.