ஜிந்த்: ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள கேரா காப் என்று அழைக்கப்படும் 24 கிராமங்களின் கூட்டமைப்பு, பெயருக்குப் பின்னால் ஜாதியை இணைத்து குடும்பப் பெயராக(surname) பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.
ஹரியானாவைப் பொறுத்தவரை இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க சம்பவமாக கருதப்படுகிறது. ஏனெனில், சாதி ஆணவப் படுகொலைகளுக்கு பெயர்பெற்ற மாநிலம் ஹரியானா.
அம்மாநிலத்தின் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 24 கிராமங்கள் அடங்கிய கூட்டமைப்புதான் இந்த புரட்சிகர முடிவை மேற்கொண்டுள்ளது. இந்தக் கூட்டமைப்பில் நாகுரா, படோடா, பதானா, கார்சிந்து மற்றும் பர்சோலா ஆகியவை முக்கியமான கிராமங்கள்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒரு கிராமவாசி கூறியதாவது, “சமீப ஆண்டுகளாக ஜாதி என்பது மனிதர்களிடையே பிரிவினையை வளர்க்கும் ஒரு மோசமான அம்சமாக திகழ்ந்து வருகிறது. இதனால், சமூகம் பிளவுபட்டு கிடக்கிறது. எனவேதான், எங்களின் கிராமக் கூட்டமைப்பு சபையானது, பெயருக்குப் பின்னால் சாதியைப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது.
அப்படி ஒருவர் தனது பெயருக்குப் பின்னால் இணைப்பை விரும்பினால், அவர் தனது ஊர் பெயரை இணைத்துக் கொள்ளலாம் என தீர்மானித்துள்ளோம். ஏனெனில், ஜாதி என்பது பின்னிணைப்பாக இருக்கையில், ஒரு மனிதரை பல விஷயங்களில் முன்னரே தவறாக கணித்து விடுகின்றனர்” என்றார்.
மேலும், இறப்பு நிகழ்ந்த வீடுகளில் உணவுப் பரிமாறுதலை தவிர்க்கவும், பாட்டியின் கோத்திரத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவைகளை கைவிடவும், இறப்பிற்கான துக்க அனுசரிப்பு நாட்களை 13 என்பதிலிருந்து 7 ஆக குறைத்தும் அந்த கிராமக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான், பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போட்டுக்கொள்ளும் வழக்கம் மிக மிக குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.