சென்னை:
திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றாலே தனி சிறப்பு உண்டு. இசையோடு மட்டுமல்லாமல், அவருடைய குரலுக்கும் நம்மில் பலரும் அடிமை என்றே சொல்லலாம். அன்று முதல் இன்று வரை மவுஸு என்பதே குறையாத ஏ.ஆர்.ரஹ்மானுக்கு போட்டியாகவே அவருடைய மகன் மற்றும் மகள் திரையுலகில் தங்களுடைய திறமைகளை நிரூபித்து வருகிறார்கள்.
அதன்படி, ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் ஒரு பாடகராக வலம் வருகிறார். இந்த நிலையில், பாடகியும் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளுமான கதீஜா ரஹ்மான் இப்போது இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். அதாவது, சில்லு கருப்பட்டி, பூவரசம் பீப்பீ, ஏலே உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருப்பவர் இயக்குனர் ஹலிதா ஷமீம்.
தற்போது, இவர் ‘மின்மினி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த திரைப்படத்திற்கு தான் கதீஜா இசையமைக்க உள்ளார். இதை சமீபத்தில், இயக்குனர் ஹலிதா ஷமீம் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில் கதீஜா திறமையான மனிதர் என்றும் சிறப்பான இசை வந்துகொண்டிருப்பதாகவும் ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார்.