டில்லி
காங்கிரஸ் தலைவர் கார்கே மோடி அரசு விஞ்ஞானிகளுக்கு நிதி ஒதுக்கத் தாமதித்து அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்டத் திட்டமிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதம் ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு செய்யும். இந்த ஆண்டு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்றும், நிதியை எதிர்பார்த்து விஞ்ஞானிகள் காத்திருப்பதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியானது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டரில்,:-
“மோடி அரசு முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு மோடி அரசு இன்னும் நிதி ஒதுக்காததால், அவர்கள் தங்கள் சேமிப்பு தொகையில் இருந்து ஆராய்ச்சிக்குச் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்., திட்ட ஊழியர்களுக்கு 3 மாதங்களாகச் சம்பளம் தரப்படவில்லை என்பதால் அவர்களுக்கு விஞ்ஞானிகளே தங்கள் சொந்த பணத்தை அளிக்கும் நிலை உள்ளது.
மோடி அரசு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைத்து அதிக நிதி ஒதுக்குவதாக உறுதி அளித்து அதை நிறைவேற்றவில்லை. இதை எல்லாம் பார்த்தால், நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்ட மோடி அரசு உறுதி பூண்டிருப்பது தெளிவாகிறது. நாட்டின் முன்னேற்றம் இதனால் தடைபடும்.
இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி 6.87% குறைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் ஏற்கனவே தங்களது கவலைகளைத் தெரிவித்து 27 நகரங்களில் நாடு தழுவிய போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. மோடி அரசு 2015-ம் ஆண்டு, அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், சொந்த நிதியில் திட்டங்களைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டது.
மோடி அரசு இப்போதும் விஞ்ஞானிகளுக்கு எதிராக முற்றிலும் அலட்சியமாகவும், அவமதிப்பாகவும் நடந்து கொள்கிறது. பிரதமர் மோடி ‘ஜெய் விஞ்ஞான, ஜெய் அனுசந்தான்’ என்று பேசினாலும். உண்மையில் அவரது விருப்பம், ‘விஞ்ஞானத்தைத் தோற்கடி, ஆராய்ச்சியை தோற்கடி’ என்பதாகத்தான் உள்ளது”.
எனக் கூறியுள்ளார்.