சென்னை: கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு, தேர்வு எழுதாமலே தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. மேலும், அண்ணா பல்கலைக்கழகம்உள்பட பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் நடத்திய தேர்விலும் குளறுபடிகள் ஏற்பட்டன. இதனால் பலர் தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது.இது சர்ச்சையானது. இது தொடர்பாக மாணவர்கள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு புகார் வந்துள்ளது.
இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் கல்லூரி தேர்வுகள் பிரச்சினை தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர், நடைபெற்று முடிந்த கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளில் பலவித பிரச்சினை, பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து மாணவர்கள் தரப்பில் புகார் வந்துள்ளதாகவும் இதுகுறித்து துணைவேந்தர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவர்கள் தரப்பிடம் அவர்களது கருத்துகளை கேட்டறியப் பெற்று இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.