கோட்டயம்: கேரளத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, ஆலப்புழாவில் உள்ள படகு வீடுகளை தனிமை வார்டுகளாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவலை கேரள அரசு கையாண்டு வரும் விதம், பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. ஆனால், தமிழகத்திலோ நிலைமை வேறுமாதிரியாக இருக்கிறது.
இந்நிலையில், கேரளத்தின் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற படகு வீடுகளை கொரோனா தனிமை வார்டுகளாக மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆழப்புழா மாவட்ட ஆட்சியர் அஞ்சனா கூறுகையில், “ஆலப்புழா மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், ஆலப்புழாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள் போன்றவற்றை தனிமை வார்டுகளாக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இதனால் 5,0806 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் ஆழப்புழாவில் உள்ள படகு வீடுகளையும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த உள்ளோம். இதற்கு படகு உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்தனர். படகு வீடுகள் மூலம் ஒரே நேரத்தில் 1500 முதல் 2 ஆயிரம் பேர் வரை தனிமைபடுத்தி தங்க வைக்க முடியும்” என்றார் அவர்.