டெல்லி: சிமெண்ட், வீட்டுவசதி மற்றும் கட்டுமான பணிகளை தொடரலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இந்த உத்தரவு வரும் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் பெரும்பாலான முதலமைச்சர்களும், மருத்துவக்குழுவினரும் ஊரங்கை நீட்டிக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.

அதேநேரத்தில் ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கி உள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி, ஆடை தயாரிப்பு, கட்டுமானம் என பல துறைகள் அடியோடு முடங்கி இருக்கின்றன.

இந் நிலையில் சிமெண்ட், வீட்டுவசதி மற்றும் கட்டுமான தொழில்களுக்கு மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து இருக்கிறது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அதற்கான அனுமதியை தந்து இருக்கிறது.

அதன் செயலாளர் அஜய்குமார் பல்லா இது தொடர்பான அனுமதியை பிறப்பித்து இருக்கிறார். நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும், சில அத்யாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, சில பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நிபந்தனைகளையும் கட்டாயம் தொழில்துறையினர் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதன்படி ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேற்றத்துக்கு ஒரு வழி பாதை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். ஊழியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை தரவேண்டும் அல்லது அவர்களை ஆலை கட்டுப்பாட்டின் கீழ் தங்க வைக்க வேண்டும் என்றால் சுகாதாரமான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

மனிதர்களும், வாகன போக்குவரத்தும் மிக இலகுவாக சென்று சேரும் வகையில் ஆலைகளில் இடவசதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆடை தயாரிப்பு ஆலைகள், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் உதிரி பாக ஆலைகளில் ஒரு ஷிப்டுக்கு 20 முதல் 25 சதவீதம் மட்டுமே பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஏற்றுமதி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சிறு, குறு ஆலைகள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கலாம். டிரான்ஸ்பார்மர்கள், தகவல் தொழில்நுட்ப தளவாடங்கள் உற்பத்தி ஆலைகள், கம்பரசர்கள் யூனிட்டுகள், ஸ்டீல் ஆலைகள், உரக்கம்பெனிகள், விதை உற்பத்தி நிறுவனங்கள், பிளாஸ்டிம் உற்பத்தி ஆலைகள், ஆட்டோமோட்டிவ் யூனிட்டுகள், வைரம் மற்றும் நகை தயாரிப்பாளர்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியை தொடங்கலாம்.

ஸ்டீல், பவர், மற்றும் சுரங்க ஆலைகள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள கொரோனா சுகாதார விதிகளின்படி செயல்பட வேண்டும். ஷிப்டுகளில் எவ்வித கூட்டமோ, நெருக்கடியோ இருக்கக் கூடாது. கட்டுமான தொழிலுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள், தனிமைப்படுத்துதல் பின்பற்ற வேண்டும். ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்று அவர்கள் ஊதியம் உறுதி கிடையாது.

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அனைத்து சரக்கு வாகனங்கள், அவை சரக்குகளுடன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அனைத்து மாநிலங்களும் அனுமதிக்க வேண்டும். அந்த வாகனங்களை எல்லைகளில் எந்த மாநில அரசும் நிறுத்தி சோதனையிடக்கூடாது.

மரம் தொடர்பான அனைத்து தொழில்கள், அது தொடர்பான வாகனங்கள் அனைத்து மாநில எல்லைகளிலும் அனுமதிக்கப்பட வேண்டும். வேளாண் உற்பத்தி, விற்பனை சார்ந்த தொழில்களும் அனுமதிக்கப்படுகின்றன. வங்கிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், லாக் டவுன் முடியும் வரை டிஜிட்டல் ஆவணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.