கொச்சி:

கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள புள்ளுவழி கிராமத்தை சேர்ந்தவர் ராணி மரியா. 1954ம் ஆண்டு பிறந்த இவர் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் மதபோதகர் பணியில் இணைந்தார். இவர் பெரும்பாலும் வட இந்தியாவில் தான் பணியாற்றி வந்தார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த 1995ம் ஆண்டில் பணியாற்றி வந்தார்.

அப்போது பெண்கள் மத்தியில் சுய உதவி குழுக்களை அமைத்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். இதன் காரணமாக அங்கு வட்டி தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த கன்னியாஸ்திரி ராணி மரியா கீழே ரோடில் இழுத்து தள்ளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

வட்டி தொழில் பாதித்தவர்களால் ஏவப்பட்ட சமுந்தர் சிங் என்பவர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். 2006ம் ஆண்டு ராணி மரியா குடும்பத்தினர் சிறையில் இருந்த சமுந்தர் சிங்க்கு மன்னிப்பு அளித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக சிங் கேரளா சென்று ராணி மரியா கு டும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணி மரியாவின் அர்ச்சிப்பை முன்னோக்கி எடுத்து செல்ல கத்தோலிக்க ஆலய நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு 2003ம் ஆண்டு வாட்டிகனில் இருந்து சிக்னல் வந்தது. இதையடுத்து 2005ம் ஆண்டு அவர் ‘‘ஆண்டவரின் சேவகன்’’ (சர்வன்ட் ஆஃப் காட்) என்று அறிவிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அவர் முக்தி பேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு அதற்கான உத்தரவு வந்தது. இதனால் அவர் ‘‘ஆசீர்வதிக்கப்பட்ட சகோதரி மரியா’’ என்று இனி அழைக்கப்படுவார். இது புனிதர் பட்டத்துக்கு ஒரு படி கீழ் உள்ள அந்தஸ்தாகும். இதற்கான விழா இந்தூரில் நடந்தது. புனித தாமஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை நடந்தது.

கேரளாவில் உள்ள சகோதரி ராணி மரியாவின் சொந்த கிராமத்திலும் மக்கள் வெடிவெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் 15ம் தேதி சிறப்பு ஜெப கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 19ம் தேதி பொதுக்கூட்டமும் சிறப்பு ஆராதனையும் நடக்கிறது.

தற்போது இந்தியாவை சேர்ந்த 3 அருட் தொண்டர்கள் இங்கு உள்ளனர். சவாரா ஆச்சென் என்று அழை க்கப்பட்ட குரியோகோஸ் எலியாஸ் சாவரா, ஏவுபிரசிம்மா என்று அழைக்கப்பட்ட சகோரி எவுபரசியா, சகோதரி அல்போன்சா ஆகியோர் ஆவர்.