திருவனந்தபுரம்,
கேரளாவில் முதல் எரிவாயுவால் இயங்கும் பேருந்தை, கேரள முதல்வர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார்.
சுற்றுசூழல் மாசுபடுவதை தவிர்க்க எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை இயக்க உலக சுற்றுசூழல் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவில், டில்லியில் அனைத்து வாகனங்களும் எரிவாயு மூலம் இயக்கப்பட்டு வருகிறது. டீசல் வாகனங்களுக்கு அங்கு தடை உள்ளது. அதுபோல் பெரும்பாலான மாநிலங்கள் எரிவாயுவால் இயக்கப்படும் வாகனங்களை இயக்க வலியுறுத்தி வருகிறது.
lng-bus-kerala
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அகில இந்திய அளவிலான மாநில போக்குவரத்துத்துறை மந்திரிகள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டை, கேரள முதல்வர் பினராய் விஜயன் குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் மத்திய பெட்ரோலியத்துறை இணை மந்திரி தர்மேந்திர பிரதான் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போக்குவரத்துத்துறை மந்திரிகள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டையொட்டி நாட்டிலேயே முதல்முறையாக இயற்கை திரவ எரிவாயு மூலம் இயங்கும் பஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பஸ்சை பினராய் விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுபற்றி மத்திய பெட்ரோலியத்துறை இணை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதன் முதலாக திரவ இயற்கை எரிவாயுமூலம் இயங்கும் பஸ் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுற்றுச்சூழல் மாசுபட்டு வரும் சூழ்நிலையில் இதுபோன்ற புதிய முயற்சிகள் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும்.
இந்த பஸ் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
3 மாதம் இந்த பஸ் சோதனை ஓட்டம் நடைபெறும். அதன் பிறகு நாடு முழுவதும் இது போன்ற பஸ்கள் அறிமுகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.