திருவனந்தபுரம்: கடந்தாண்டு ஜனவரி 30ம் தேதியன்று, நாட்டின் முதல் கொரோனா தொற்று நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில், இன்றைய அளவில், நாட்டிலேயே அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட மாநிலமாக திகழ்கிறது கேரளா.

சீனாவின் ஊஹானிலிருந்து திருச்சூருக்கு திரும்பிய கேரள மாணவர் ஒருவர்தான், நாட்டிலேயே முதல் கெரோனா நோயாளி!

தற்போதைய நிலையில், அம்மாநிலத்தில் சுமார் 72239 பேர், கொரோனா தொற்றுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலையில், நாட்டிலேயே மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தவார நிலவரப்படி, அந்த மாநிலத்தில் கொரோனாவால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 3705 என்பதாக உள்ளது. ஆனால், இந்த மரண எண்ணிக்கை, அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் குறைவு என்கிறது அம்மாநில அரசு.

எர்ணாகுளம் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 11024 பேர் கொரோனா சிகிச்சையில் இருக்கின்றனர். கோழிக்கோடு மாவட்டத்தில் 8023 பேர்கள் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவார நிலவரப்படி, பாசிடிவ் விகிதம் 10.66% என்பதாக இருந்தது.

ஜனவரி மாதம் துவக்கம் முதல், கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.