திருவனந்தபுரம்:

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் கேரளா சாதனை படைத்துள்ளது. தொற்று அறிகுறி காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டவர் களுக்கு நோய் தொற்று உறுதியாகாத நிலையில், அவர்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 68ஆயிரம் விடுவிக்கப்பட்டு இருப்பதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் முதல் கொரோனா தொற்று பரவிய மாநிலமாக கேரளா திகழ்ந்த நிலையில், மாநில அரசு எடுத்து வந்த கடுமையான முயற்சி காரணமாக, கடந்த சில நாட்களாக நோய்தோற்று பரவாத மாநிலமாக தடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன்,  மாநிலத்தில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டவர்கள் சுமார்  68000 பேர் தனிமைப்படுத்தலை முடித்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும்,  கடந்த  ஏப்ரல் 2 ஆம் தேதி, தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,65,934 ஆக இருந்தது. இதில், 1,65,291 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில், 643 பேர் மருத்துவமனையிலும் இருந்தனர்.

ஆனால், ஏப்ரல் 15 புதன்கிழமை, இந்த எண்ணிக்கை 68,000 க்கும் குறைந்து 97,464 ஆக குறைந்தது. இதில், 96,942 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர், 522 பேர் மருத்துவமனை தனிமையில் உள்ளனர்.

மாநிலத்தில் கொரோனா வைரஸுக்கு மொத்தம் 387 பேர் நேர்மறை சோதனை செய்துள்ளனர்.  இதன் காரணமாக தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, 16,745 மாதிரிகள் தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், 16,002 எதிர்மறை. நேர்மறை சோதனை செய்த 387 பேரில், 264 பேர் வெளிநாடுகளிலிருந்தும் மற்ற மாநிலங்களிலிருந்தும் திரும்பி வந்துள்ளனர். எட்டு பேர் வெளிநாட்டு பிரஜைகள்.

மாநிலத்தில் மீட்பு விகிதம் நாட்டிலேயே மிக அதிகம் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். மாநிலத்தில் 218 பேர் மீண்டுள்ளனர். சோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மாநில மக்கள் ஊரடங்கு  விதிகளை  கண்டிப்பாக பின்பற்றி வருவதால் மாநிலத்தில் புதிய கேஸ்களின்  எண்ணிக்கை குறைந்துவிட்டது. அது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எவ்வாறாயினும், நாங்கள் விழிப்புடன் இல்லாமல் இருந்திருந்தால், வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கும் என்று கூறியவர், இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில்,  ஏப்ரல் 20 க்குப் பிறகு எடுக்கப்பட வேண்டிய தளர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

மத்திய அரசு, ஊரடங்கில்  சில தளர்வுகளை வெளியிட்டுள்ள நிலையில்,  மாநிலங்களுக்கு நிதி உதவி இன்னும் அறிவிக்கப்படவில்லை. “இது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.