திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் திங்கட்கிழமை நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உலக அளவில் நோய் பரவுவது நம்மை கவலைக்குள்ளாக்குகிறது.

கடந்த சில தினங்களில் அமெரிக்காவில் மட்டும் 8 மலையாளிகள் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதுவரை அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலுமாக 18 மலையாளிகள் இறந்துள்ளனர்.

கேரளாவில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும், கொல்லம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் இந்நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

3 பேருக்கு அவர்களுடன் தொடர்பு இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. கொல்லம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் டெல்லி நிஜாமுதீன் தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் ஆவர். பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவருக்கு வெளிநாட்டிலிருந்து நோய் பரவி உள்ளது.

இதுவரை கேரளாவில் 327 பேருக்கு நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 266 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 59 பேருக்கு நோய் குணமாகி உள்ளது. தற்போது 1,52,804 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,52,009 பேர் வீடுகளிலும், 795 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர்.

இன்று 122 பேர் புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10,716 பேரின் உமிழ்நீர் நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 9,607 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. காசர்கோடு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை 4 நாட்களில் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் தற்போது 200 படுக்கைகளும் , 10 அவசர சிகிச்சை படுக்கைகளும் உள்ளன. விரைவில் 100 படுக்கைகளும், 10 அவசர சிகிச்சை படுக்கைகளும் அதிகரிக்கப்படும். இந்த மருத்துவமனையில் 7 கோடி மதிப்பிலான அதிநவீன உதாரணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது கேரளா முழுவதும் வாகனங்களை பழுது பார்க்கும் ஒர்க் ஷாப்புகள் மூடப்பட்டுள்ளதால் அவசர வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஒர்க் ஷாப்புகள் திறப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும்.

இதேபோல செல்போன், கம்ப்யூட்டர் கடைகளும் திறப்பது குறித்து உடனடியாக முடிவு எடுக்கப்படும். காசர்கோடு மாவட்டத்தில் எல்லையை திறக்க கர்நாடக அரசு முன்வந்துள்ளது. கொரோனா நோயாளிகள் தவிர மற்ற நோயாளிகளை கர்நாடக மாநில மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. நோயாளிகளை பரிசோதித்து அனுப்ப கர்நாடக எல்லையில் ஒரு டாக்டர்கள் குழு நியமிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.