திருவனந்தபுரம்
கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைக் கேரள காவல்துறையினர் சோதித்து தொடர்பில் இருந்தோரை கண்டறிவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டார். அதன் பிறகு கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்தது. அரசின் நடவடிக்கைகள் காரணமாக வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நேற்று கேரள மாநிலத்தில் 1212 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 38,144 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று இங்கு 6 பேர் மரணம் அடைந்து மொத்தம் 127 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று 880 பேர் குணம் அடைந்து இதுவரை 24922 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,047 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா நடவடிக்கைகள் குறித்த தனது தினசரி செய்தியாளர் சந்திப்பில் பினராயி விஜயன், “கொரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது. எனவே கேரள காவல்துறையினர் கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைச் சோதித்து தொடர்பில் இருந்தோரை கண்டறிந்து வருகின்றனர்.
இந்த விவரங்கள் வேறு எந்த ஒன்றுக்கும் பயன்படுத்தப்பட மாட்டாது. இதனால் யாருடைய தனிப்பட்ட சுதந்திரமும் பாதிப்பு அடையாது. சட்ட அமைப்புக்களுக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்புள்ளவர்களை கண்டறிய மட்டுமே இந்த விவரங்களைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது மக்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.