திருவனந்தபுரம்

கேரள அரசு தேசிய ஊரடங்கை நான்கு கட்டங்களாகத் தளர்த்த ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலில் உள்ளது.  இந்த ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பில் கேரளா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்டார்.

வரும்14 ஆம் தேதி முதல் ஊரடங்கு முடிவடைவதால் அது குறித்து ஆலோசனை வழங்க 17 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை முதல்வர் பிணராயி விஜயன் அமைத்தார்.  அந்தக குழுவுக்குத் தலைவராக முன்னாள் தலைமைச் செயலர் ஆபிரகாம் பொறுப்பு ஏற்றார்.   இந்தக் குழு மத்திய அரசு தேசிய ஊரடங்கை நீட்டிக்காவிடில் கேரளாவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை அளித்துள்ளது.

இது குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு குழு உறுப்பினர், “தேசிய ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி முடிவடைவதை ஒட்டி கேரள அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது.  முக்கியமாக சமூக இடைவெளியை மாநிலம் எங்கும் ஊரடங்குக்கு பிறகும் கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள திருவனந்தபுரம், காசர்கோடு, கண்ணூர் போன்ற இடங்களில் மக்கள் நடமாட்டத்தை மிகவும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.  மற்ற மாநிலங்களில் பாதிப்பு குறைவாக உள்ளதால் கட்டுப்பாட்டுக்களை நான்கு கட்டங்களாகத் தளர்த்தலாம்.   இதன் மூலம் 7 அதிகம் பாதிப்புள்ள மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

முதல் கட்டமாக உள்ளூர் பேருந்துகள் இயங்க மட்டும் அனுமதிக்கலாம்.  இரண்டாம் கட்டமாக மாவட்டங்களுக்கு இடையில் பேருந்துகள் இயங்க அனுமதிக்கலாம்.  மூன்றாவதாக மாநிலத்துக்கு வெளியே பேருந்துகள் சென்று வர அனுமதிக்கலாம்.  கடைசிக் கட்டமாக ரயில்கள் மட்டும் சர்வதேச விமானங்களை அனுமதிக்கலாம்.  ஒவ்வொரு கட்டத்திலும் 15 நாட்கள் வீதம் அமைத்து ஊரடங்கை ஜூலை இறுதியில் முடிக்கலாம்.

தனியார் வாகனங்களைப் பொறுத்த வரை பதிவு எண்களைப் பொறுத்து ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்களை மாறி மாறி அனுமதிக்கலாம்.  ஞாயிறு அநுமதிக்க கூடாது.  பேருந்துகளில் முழு இருக்கையிலும் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் குடும்பத்தில் ஒருவர் அனுமதிக்கப்படலாம்.   அத்தியாவசியம் இல்லாத பொருட்களான எலக்டிரானிக்ஸ் நகைகள் போன்றவற்றை விற்கும் கடைகளைக் கடைசிக் கட்டத்தில் திறக்கலாம்.  ஆனால் இவை அனைத்தும் மத்திய அரசின் முடிவைப் பொறுத்து அமையும்.  பல மாநிலங்கள் தேசிய ஊரடங்கை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.