திருவனந்தபுரம்:
நீட் தேர்வு எழுத கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுக்க எர்ணாகுளம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் மசூதிகளில் இடமளித்து உதவியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் போதுமான நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததால் தமிழக மாணவர்கள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியிருக்கிறார்கள்.
வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஐந்து சிறப்பு பேருந்துகள் மூலம் நெல்லையில் இருந்து தமிழக மாணவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ஏற்கனவே கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கி ஓய்வெடுக்க எர்ணாகுளம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது மசூதிகளில் இடமளித்துள்ளனர்.
இதேபோல் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையம் செல்ல ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்வதாக கேரள சிஐடியு, உட்பட சில ஆட்டோ தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.