டெல்லி: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே PM SHRI நிதி விடுவிக்கப்படும் என கேரள எம்.பி.யின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பிஎம்ஸ்ரீ நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
முன்னதாக, மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, மத்திய அரசின் கல்வி திட்டமான, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கூறியது. மேலும், புதிய கல்விக்கொள்கையை ஏற்க வேண்டும் என்றும் கூறியது.
இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான, தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையவும் மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.
இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதம் தெரிவித்து கடிதம் எழுதியது. பின்னர், அங்கு காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தால், பிஎம்ஸ்ரீ திட்டத்தில்இணைவதில்இருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்த , திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய கல்வி அமைச்சர் சிவன்குட்டி தலைமையில் ஏழு பேர் அடங்கிய குழுவை முதல்வர் பினராயி விஜயன் அமைத்தார். இந்த குழு அறிக்கை அளிக்கும் வரை பி.எம்., ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படாது என அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி, எனக்கு தனிப்பட்ட முறையில் பி.எம்., ஸ்ரீ திட்டம் மீது எந்தவித மகிழ்ச்சியோ அல்லது அதிருப்தியோ இல்லை. இடது ஜனநாயக முன்னணியின் கொள்கையை பின்பற்றுவதே எங்கள் நோக்கம். திட்ட நடைமுறைப்படுத்தலை ஆய்வு செய்ய அமைச்சரவை துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் கூட்டம் இன்னும் நடைபெறவில்லை. கூட்டத்துக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்போம். அதே சமயம் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதி பெறும் முயற்சி தொடரும். இது தொடர்பாக சமீபத்தில் நடந்த மத்திய – மாநில அதிகாரிகள் அளவிலான கூட்டத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
வரும் 10ம் தேதி டில்லி செல்கிறேன். அங்கு மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து கேரளாவுக்கு நிதி வழங்க வலியுறுத்துவேன் என்றார்.