ஆலப்புழா,
அரசுக்கு சொந்தமான நிலத்தை அமைச்சர் ஆக்கிரமித்துள்தாக எழுந்த புகாரை தொடர்ந்து, கேரளா ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தன் காரணமாக, கம்யூனிஸ்டு தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் தாமஸ்சான்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் ராஜினாமா செய்ய காரணமாக இருந்த பெண் கலெக்டர் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசு நிலத்தை தாமஸ் சாண்டி ஆக்கிரமிப்பு செய்தது குறித்து அங்குள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை தொடர்ந்து, எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு ஆலப்புழா கலெக்டர் அனுபமாவுக்கு உத்தரவிட்டது.
கேரளாவில் குட்டநாடு தொகுதியைச் சேர்ந்த தாமஸ்சான்டிக்கு இவருக்கு சொந்தமாக ரிசார்ட் உள்ளது. இதற்கு செல்ல அரசு நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஐகோர்ட்டின் உத்தரவின்பேரில் அந்த இடம் குறித்து ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக அரசுக்கு ஆலப்புழா கலெக்டர் அனுபமா, அறிக்கை அளித்தார்.
தாமஸ் சாண்டிக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்றும், உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நிலத்தை அளக்க விடாமல் அவரது ஆதரவாளர்கள் தடுத்தனர்.
இதன் காரணமாக, சேட்டிலைட் உதவியுடன் நிலத்தை அளவீடு செய்தார் கலெக்டர் அனுபமா. அப்போது அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது உறுதியானது. இதை அறிக்கையாக தயாரித்து, அரசுக்கும், ஐகோர்டிலும் தாக்கல் செய்தார்.
இதன் காரணமாக போக்குவரத்து துறை அமைச்சர் தாமஸ் சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கலெக்டர் அனுபமாவின் இவரது துணிச்சலான இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில், பெங்களூர் சிறைச்சாலையில சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததை உலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டிய டிஐஜி ரூபாவை அடுத்து, தற்போது கேரள கலெக்டரின் துணிச்சலான நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு மழை குவிந்து வருகிறது.