பா.ஜ,க, முதல்வரிடம் மன்னிப்பு கேட்ட கம்யூனிஸ்ட் அமைச்சர்..
’’ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் ‘’ என்று பிடிவாதம் பிடிப்பது அரசியல் வாதிகளுக்கு அழகு.
அதில் இருந்து மாறுபட்டு, தான் கூறிய பிழையான கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்,அமைச்சர் ஒருவர்.
அவர் வேறு யாரும் அல்ல.
பக்கத்து மாநிலமான கேரளாவைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா.
‘’கேரளாவில் கொரோனாவுக்கு இதுவரை நான்கு பேர் மட்டுமே இறந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கோவாவைச் சேர்ந்தவர்’ என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருந்தார்.
போகிற போக்கில்,’’ கோவாவில் சுகாதார வசதி சரி இல்லாததால் அந்த நோயாளி சிகிச்சைக்குக் கேரளா வந்திருந்தார்’’ என்றும் தெரிவித்தார், சைலஜா.
இதற்கு கோவா மாநில பா.ஜ.க. முதல் – அமைச்சர் பிரமோத் சாவந்த் மறுப்பு தெரிவித்தார்.’
’’ கோவாவில் இருந்து யாரும் கேரளாவுக்குச் சிகிச்சைக்குப் போய் உயிர் இழக்கவில்லை. அமைச்சர் சைலஜா தெரிவித்த கருத்து தவறு’’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார், சாவந்த்.
திகைத்துப் போன சைலஜா, இது குறித்து விசாரிக்க ஆணையிட்டார்.
செத்துப்போன நோயாளி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை உள்ளடக்கிய மாஹே பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது
மாஹே என்பதற்குப் பதிலாகக் கோவா எனக் கூறி விட்டார், அமைச்சர்..
தான் தவறு செய்திருப்பதை உணர்ந்து வருத்தம் அடைந்தார்.
உடனடியாக கோவா முதல்வர் சாவந்தை போனில் தொடர்பு கொண்டு, தான் சொன்னது தவறு என்று கூறியதோடு, அவரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார், சைலஜா.
அமைச்சர் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார், கோவா முதல்வர்.
– ஏழுமலை வெங்கடேசன்