திருவனந்தபுரம்: கேரளாவில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. வெஸ்ட் நைல் எனப்படும் அந்த காய்ச்சலுக்கு ஒருவர் பலியான நிலையில், சுகாதாரத்துறையினருக்கு மாநில அரசு காய்ச்சல் பரவலை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.

இந்தியாவிலேயே புதுப்புது வகையான நோய்கள் பரவுவதில் கேரளாவே முதலிடத்தில் இருந்து வருகிறது. கொரோனா தொற்றும் முதன்முதலில் கேரளாவில்தான் உறுதி செய்யப்பட்டது. அதுபோல டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், வவ்வாலால் பரவும் நிஃபா வைரஸ் உள்பட பல நோய்க ளும் கேரளாவில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு அந்த மாநில சீதோஷ்ண நிலைதான் காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது, புதிய வகை தொற்று பரவி மக்களை அச்சுறுத்துகிறது. வெஸ்ட் நைல் எனப்படும் இந்த புதிய வகை தொற்று காய்ச்சல் திருச்சூர் மாவட்டத்தில் அதிகளவில் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காய்ச்சலானது வெஸ்ட் நைல் காய்ச்சல், க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.  இதை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரியை சேர்ந்த ஜோபி என்பவர் மேற்கு நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து,  மாநில சுகாதாரத்துறை உஷார்படுத்தப் பட்டுள்ளது. திருச்சூர் மாவட்ட மருத்துவ சிறப்புக் குழு, உயிரிழந்த நோயாளி வசித்து வந்த கண்ணாரா பகுதிக்கு சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. திருச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சந்தேகக்குறிய நபர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணாஜார்ஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெஸ்ட் நைல் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. தற்காப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட வேண்டும் என்றும், கொசுக்களை அழிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளை அவர் வலியுறுத்தி உள்ளார்.

பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். காய்ச்சல் அல்லது நோயின் பிற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பொதுமக்கள் மருத்துவமனை சிகிச்சையைத் தேர்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.