திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் திருவள்ளூரை சேர்ந்தவர் ஷாகித் (வயது 28). குடும்ப ஏழ்மை காரணமாக மதரசாவில் இணைந்து 10 வயதில் தான் பள்ளிப் படிப்பை தொடங்கினார். கோழிக்கோடு மாவட்டம் கப்பாடில் உள்ள இஸ்லாமிய அகாடமியில் பள்ளியில் மேல்நிலை கல்வியை முடித்தார்.
பின்னர் கோழிக்கோடு பல்லைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் பிஏ ஆங்கிலம் முடித்து கண்ணூரில் உள்ள மதரசாவில் ஆசிரியராக பணியாற்றினார். தற்போது இவர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 693வது இடத்தை பிடித்துள்ளார். 6வது முறையாக தேர்வை எழுதி இவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் டில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் சென்டர் பார் கோச்சிங் அண்டு கேரியர் பிளானிங் மையத்தில் பயின்று வருகிறார். அதோடு ஐதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்றுள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாணவர் அமைப்பான இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பின் நிதியுதவியுடன் இவர் பயிற்சியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.