திருவனந்தபுரம்:

ஓணம் பண்டிகையையொட்டி ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு பெண்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மோகன்லால் நடித்த ‘வெலிபாடிண்டே புஸ்தகம்’ என்ற மலையாள திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ‘‘ஜிமிக்கி கம்மல்’’ என்ற பாடல் அறிமுக விழா கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ரசிகர்கள் தங்களது சொந்த நடனத்தை மேற்கொள்ளுமாறு ஒரு போட்டியை திரைப்பட தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து கடந்த வாரம் முதல் கேரளா பெண்கள் பலர் இந்த பாடலுக்கு நடனமாடி அதன் வீடியோவை யூ டியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளா பெண்கள் பாரம்பரியமிக்க திருவன ந்தபுரம் வெள்ளை புடவை, ஜிமிக்கி அணிந்தும் நடனமாடியுள்ளனர்.

இளம் பெண்கள் மட்டுமின்றி நடுத்தர வயது பெண்கள், கர்ப்பிணிகள், ஒரு மூதாட்டியும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வளைதளங்களில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது. ஐக்கிய அரசு எமிரேட்ஸ் குழு பெண்கள் கறுப்பு சட்டை அணிந்தும், வெள்ளை வேஷ்டி மற்றும் கறுப்பு கண்ணாடி, ஜிமிக்கியுடன் ஆட்டம் ஆடி கலக்கியுள்ளனர்.

இந்தியன் ஸ்கூல் ஆப் காமஸ் கல்லூரியில் ஓணம் கொண்டாடிய மாணவ, மாணவிகள் ஆடிய நடனம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல வீடியோக்கள் ஓணம் பண்டிகை அன்று கேரளாவில் பல பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடன வீடியோவை யூ டியூப்பில் 43 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.