திருவனந்தபுரம்: கேரளாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்த எதிர்ப்பு தொடரப்பட்ட வழக்கை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 10ல் துவங்கி நடந்தன. கொரோனா தொற்று காரணமாக மார்ச் 19ம் தேதிக்கு பிறகு தேர்வுகள் முடங்கின. பிளஸ் 1 தேர்வுகளும் தடைப்பட்டன.
நிலுவையில் உள்ள பாடங்களுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் மே 26 முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி 10ம் வகுப்புக்கு கணக்கு, இயற்பியல், வேதியியல் ஆகிய தேர்வுகள் முறையே மே 26, 27, 28 ஆகிய தேதிகளிலும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் மே 26 முதல் மே 30 வரையிலும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வுக்கு எந்த தடையும் விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், வழக்கையும் தள்ளுபடி செய்தது.
தேவையான முன்னெச்சரிக்கைகளுடன் தேர்வுகளை நடத்துவதாக மாநில அரசு தெரிவித்துள்ளதையும் நீதிமன்றம் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, நாளை கட்டாயம் தேர்வு நடப்பது உறுதியாகிவிட்டது.
முன்னதாக, அனைத்து தேர்வு அறைகளும் தீயணைப்புதுறையினரால் கிருமிநாசினி கொண்டு துாய்மைப்படுத்தப் பட்டு வருகிறது. அறையில் மாணவர்களுக்கு முகக்கவசம், கைகளை சுத்தம் செய்ய வசதி செய்யப்படுகிறது. ஒரு அறையில் 20 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதி உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.