கோழிக்கோடு

கேரளாவில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியதாக அம்மாநில சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பரவியது. இவ்வாறு பல்வேறு காய்ச்சல்களால் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்றனர்.

இதில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்புக்குள்ளான 2 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில் சிலருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களும் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கேரள மாநிலம் முழுவதும் இதனால்  பரபரப்பு ஏற்பட்டது. கோழிக்கோடு மாவட்டத்தில் சுகாதார நடவடிக்கைகள் மூலம் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவ என்ன காரணம் என்பதை கண்டறியும் பணியில் மத்திய சுகாதார குழுவினர் ஈடுபட்டனர்.

அக்குழுவினர் தொற்று பாதித்த பகுதியில் தோட்டங்களில் இருந்த வவ்வால்களின் மாதிரிகளைச் சேகரித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துக்குப் பரிசோதனைக்காக அனுப்பி இருந்தனர். மொத்தம் 12 வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அவற்றில் சில வவ்வால்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

கேரள மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ்,

“வவ்வால்கள் தான் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியதற்குக் காரணம் என்பது உறுதியாகி உள்ளது.  இந்த தகவலை மத்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உறுதிப்படுத்தி உள்ளது” 

என்று அறிவித்துள்ளார்.