கொச்சி
இந்து – இஸ்லாமியர் காதல் திருமணம் செல்லும் என கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கேரளா மாநிலம் கண்ணனூரை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். வீட்டார் எதிர்க்கவே அவர் கடந்த மே மாதம் 16ஆம் தேதி காதலருடன் வீட்டை விட்டு சென்று விட்டார். காதல் திருமணம் புரிந்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் அரியானாவில் வசித்து வந்த இருவரையும் போலிசார் கண்டுபிடித்து கேரளாவுக்கு அழைத்து வந்தனர். அந்தப் பெண் பெற்றோருடன் அனுப்பப்பட்டார். அந்தப் பெண்ணின் பெற்றோர் அவர் மனதை மாற்ற ஒரு யோகா மையத்தில் சேர்த்தனர்.
இதற்கிடையில் இஸ்லாமிய வாலிபர் தன் மனைவியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என ஹேபியஸ் கார்பச் மனு ஒன்றை சமர்ப்பித்தார். அதன்படி அந்தப் பெண் தனி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். தனது பெற்றோரின் விருப்பப்படி நடந்துக் கொள்வதாக முதலில் கூறிய அந்தப் பெண் நான்கே நாட்களில் தனது கணவருடன் வாழ விரும்புவதாக தெரிவித்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிதம்பரேஷ், சதீஷ் நினான் ஆகியோரின் அமர்வில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில், ”தான் விரும்பிய மதத்தை சுதந்திரமாக பின் பற்ற அரசியல் சட்டப்படி முழு உரிமை இருக்கிறது. அதில் யாரும் தலையிட முடியாது. இந்த திருமணம் செல்லும் என இந்த நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. கணவனுடன் வாழ முடிவெடுத்த இந்தப் பெண்ணின் துணிச்சலை நீதிமன்றம் பாராட்டுகிறது. தேவை இல்லாமல் வழக்கை திசை திருப்ப முயன்ற பெற்றோருக்கு கணடனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இரு வேறு மதத்தினர் திருமணம் செய்துக் கொள்ளும் போது அதற்கு மதச்சாயம் பூசி எதிர்ப்பது வேதனை தரும் விஷயம் ஆகும். எல்லா மதமாற்று திருமணங்களுமே தவறானது என்னும் எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.