திருவனந்தபுரம்
கேரள அரசு அறிகுறி அற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பணி செய்ய அனுமதித்த உத்தரவில் மாறுதல் செய்ய முடிவு எடுத்துள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்பது விதியாகும். இதில் கொரோனா உறுதி செய்யப்படுவோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் எனவும் விதியில் உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்கள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளனர்.
கடந்த 14ஆம் தேதி அன்று கேரள அரசு ஒரு உத்தரவை வெளியிட்டது. அதன்படி வெளி மாநிலத்தில் இருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பு உறுதியாகி அறிகுறி இல்லாமல் இருந்தால் அவர்கள் தனியாகப் பணி புரிய அனுமதிக்கலாம் என கூறப்பட்டது. இவர்கள் மற்ற தொழிலாளர்களுடன் சேராமல் தனியாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த உத்தரவு திரும்பப் பெற்றுள்ளதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவில் மாறுதல் செய்ய உள்ளதாகவும் விரைவில் இந்த உத்தரவு மாறுதல்களுடன் வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகின. இதை அரசு அதிகாரி ஒருவர் ஆமோதித்துள்ளார். ஆனால் அவர் இந்த உத்தரவு திரும்ப பெற்றதற்கான காரணங்களைத் தெரிவிக்க மறுத்துள்ளார்.