திருவனந்தபுரம்
கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்க உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இதுவரை 24.48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 8000க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இது வரை 21.98 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது 2,41,972 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். இதனால் அக்குழந்தைகளின் கல்வி, எதிர்காலம், வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்குறி ஆகி உள்ளது. இவர்களுக்கு உதவ வேண்டும் எனப் பலரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
இதையொட்டி கேரள அரசு கொரோனாவால் உயிரிழந்தோரின் குழந்தைகளுக்கு ஒரு தடவை நிதி உதவியாக ரூ. 3 லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2000 நிதி உதவி வழங்க உள்ளதாகவும் குழந்தைகள் பட்டப்படிப்பு வரை கல்வி பயிலும் செலவை அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.