திருவனந்தபுரம்

கேரள அரசின் கே போன் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணைய வசதி வழங்கப்பட உள்ளது.

கேரள அரசின் கே போன் திட்டம் என்பது அரசு சார்பில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் மூலம் மாநிலம் எங்கும் இணைய வசதி வழங்கும் திட்டமாகும்.  இந்த திட்டம்  கேரள மாநில தொழில் நிதி ஆணையத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.  அத்துடன் மாநிலம் எங்கும் ஆப்டிக் ஃபைபர் கேபிளை நிறுவ கேரள மின்சார வாரியம் மற்றும் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் கேரள தொழில்நுட்பத் துறை மூலம் இணைப்பு வழங்கப்பட்டது.

இந்த கேபிள்கள் மூலம் இணைய சேவை வழங்குவோர் மற்றும் கேபிள் டிவி சேவை வழங்குவோர் இணைந்து வீடுகளுக்குச் சேவை வசதியை அளிக்க உள்ளனர்.    இதன் மூலம் மாநிலம் எங்கும் அதிக வேகம் கொண்ட இணைய சேவையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.    அனைத்து மொபைல் கோபுரங்களையும் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணி வரும் 2020 டிசம்பருக்குள் முழுவதுமாக முடிவடைய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.   இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அனைத்து தகவல் தொழில் நுட்ப அலுவலகங்கள், செயற்கை நுண்ணறிவு அலுவலகங்கள்,  இணைய சேவை நிறுவனங்கள் ஆகியவை பலன் அடையும் எனக் கூறப்பட்டுள்ளது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கு அதிவேக இலவச இணைய சேவை வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.  அத்துடன் இந்த ரூ.1548 கோடி செலவில் நடைபெறும் இந்த திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வராத குடும்பங்களுக்குச் சலுகை கட்டணத்தில் இணையச் சேவை வழங்கப்பட உள்ளது.