கொச்சி:
2 மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எளிதாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இதன் தளர்வுகளில் ஒற்றைப்படை அடிப்படையில் தனியார் வாகனங்களை இயக்க அனுமதிப்பது, இரவு 7 மணி வரை உணவருந்தும் சேவைகள் அனுமதிப்பது போன்றவைகளும் அடங்கும்.
கொரோனா பாதிப்பு கேரளாவில் கட்டுக்குள் உள்ளது. இதனால் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாதிப்பு அடிப்படையில் பிரிக்கப்பட்ட நான்கு மண்டலங்களில், ‘ஆரஞ்சு- -ஏ, ஆரஞ்சு -பி’ மண்டலங்களில் உள்ள, பத்தணந்திட்டை, எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு, திருச்சூர் மாவட்டங்களில் நாளை முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுகிறது.
அதன்படி, ஒற்றை இலக்க தனியார் வாகனங்கள் திங்கள், புதன், வெள்ளியும், இரட்டை இலக்க வாகனங்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயங்கலாம். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பெண்கள் ஓட்டும் வாகனங்களுக்கும் இலக்க கட்டுப்பாடு கிடையாது. ஓட்டல்கள், அத்தியாவசிய பொருள் கடைகள், இரவு, 7.00 மணி வரை இயங்கலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முடிதிருத்தும் கடை செயல்படும்.
கட்டுமான பொருட்களுக்கான கடைகள் திறக்கப்படும். சரக்கு போக்குவரத்து முழுமையாக செயல்படும். ஆனால் அரசு பஸ்கள் இயங்காது. பச்சை மண்டலமான, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. இங்கு எல்லா கடைகளும் திறந்திருக்கும். வாகனங்களுக்கு கட்டுப்பாடு இருக்காது.
இடுக்கியில், தமிழக எல்லையில் ஏற்கெனவே உள்ள ஊரடங்கு நீடிக்கும். எனினும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்கலைகழக தேர்வுகள், மே, 11 முதல் துவங்குகிறது. அதேநேரத்தில் சிவப்பு மண்டலத்தில் உள்ள காசர்கோடு, கண்ணுார், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் ஊரடங்கு தற்போதைய நிலையில் தொடர உள்ளது.