டெல்லி:
குடியுரிமைத் திருத்தச்சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற கூறி குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
மத்தியஅரசு சமீபத்தில் அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஷரத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இந்துக்கள், சீக்கியா்கள், பவுத்தா்கள், சமணா்கள், பாா்சிகள் மற்றும் கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும், ஆனால் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த சட்டம் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், மதசார்பற்ற நாட்டில் இந்த சட்டம் தேவை யற்றது என்று வலியுறுத்தி, இந்த சட்டத்துக்கு எதிராக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடா்ந்து வருகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு கேரளாவை ஆளும் மாநில கம்யூனிஸ்டு அரசும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கேரளாவில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ள மாநில முதல்வர் பினராயி விஜயன், கேரள சட்டமன்றத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றி உள்ளார்.
இந்த நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்து எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு இன்று வழக்கு தொடர்ந்துள்ளது. மனுவில், குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்பின் 14, 21 மற்றும் 25 வது பிரிவுகளை மீறுவதாகவும், மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்று தெரிவித்து உள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. சிஏஏ எதிராக முதன்முதலில் சட்ட மன்றத்தைக் கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றிய கேரள மாநில அரசு, தற்போது முதன்முதலாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.