வீட்டுக்கே வரும் மது : சுமை கூலி: 100 ரூபாய்..

பிரதமரின் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளைக் கூட இத்தனை கச்சிதமாகக் கேரள அரசு செய்திருக்குமா? என்று தெரியவில்லை.

கொரோனா நோயாளிகள் நலனைக் காட்டிலும், மாநிலத்தில் உள்ள குடிமகன்கள் உடல் நலத்தில் அளவுக்கு அதிகமாகவே அக்கறை காட்டுகிறது, அரசாங்கம்.

‘ அடைந்தால் மதுபானம். ..இல்லையேல் மரணம்’’ என்ற மன நிலையில் உள்ள கேரள ’குடிமக்கள்’’-

ஆல்கஹால் கிடைக்காத ஆத்திரத்தில் ,தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட, அவர்களுக்காக புதிய விதிகள் செய்து மது விநியோகம் செய்யப்போகிறது, பினராயி விஜயன் தலைமையிலான அரசு.

‘’ இந்த நபருக்கு ’வித்டிராவல் சிம்டம்’ உள்ளது’’ என்று அரசு மருத்துவர் சான்று கொடுத்தால், அவருக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’ வழங்க முடிவு செய்துள்ளது, கேரளா.

டாக்டரின் சான்றிதழைக் கொடுத்தால் , மாநில கலால் துறை, குடிமகனுக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’ வழங்கும். அந்த  பாசை ’கேரள அரசின் மதுபானக்கழகமான ‘’பெவ்கோ’  அதிகாரிகளிடம் சமர்ப்பித்தால்- வீடு தேடி மது  பாட்டில்கள் வரும்.

ஒரு வாரத்துக்கு 3 லிட்டர் மது.

ஒயின் மற்றும் பீர் கிடையாது.

குடோனில் எந்த சரக்கு இருப்பில் உள்ளதோ அந்த சரக்கு வீட்டு வாசல் படிக்கு வரும்.

போக்குவரத்து செலவாக ஒவ்வொரு பாசுக்கும் 100 ரூபாய் வசூலிக்கப்படும்.

சரக்கு வாகனங்களுக்குத் துணையாக போலீசார் உடன் செல்ல வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமா?

குடிமகன்கள் வீட்டில் கொண்டு போய், சரக்கு கொடுக்க மறுக்கும் ‘பெவ்கோ’ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார், ‘பெவ்கோ’ நிர்வாக இயக்குநர் ஸ்பர்ஷன் குமார்.

‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’’ என்று புலம்பிக்கொண்டே, குடிமகன்களுக்கு மருத்துவச்சான்று கொடுத்து வருகிறார்கள், அங்குள்ள டாக்டர்கள்.

தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் கேரள டாக்டர்கள் நேற்று கறுப்பு ‘பேட்ஜ்’ அணிந்து,துக்க தினம் கடைப் பிடித்தனர்.