திருவனந்தபுரம்: கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: மாநிலத்தில் புதிதாக 22,414 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 22 பேர் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

5,431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தடுப்பூசிகளை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கொரோனாவால் மாநிலங்கள் ஏற்கெனவே நிதிச் சுமையில் உள்ளன.

மாநிலங்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளிவிடாமல் மத்திய அரசே மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கேரள அரசு இலவசமாகவே தடுப்பூசியை வழங்கும் என்றார். முன்னதாக கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க கோரி பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.