திருவனந்தபுரம்: கேரளாவில் என்ஐஏ சோதனைக்கு எதிராக பிஎப்ஐ நடத்திய வன்முறை வெறியாட்டத்தின்போது சேதப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அரசு சொத்துக்களுக்கு இழப்பீடாக ரூ.5.06 கோடி செலுத்த வேண்டும் என பிஎஃப்ஐ அமைப்புக்கு கேரள மாநில அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ சோதனை நடத்தியது. என்ஐஏ வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே நாளில் என்ஐஏ, இந்திய அமலாக்கத்துறை, மத்திய ரிசர்வ் காவல் படையினர், மாநில காவல்துறையினர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். கேரளம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது 100-க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ அமைப்பு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனை கண்டித்து கேரள மாநிலத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி ஒருநாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு விசாரணை நடத்தி, பிஎப்ஐ அமைப்பை கடுமையாக சாடியதுடன், மாநில அரசு, காவல்துறையினரையும் கடுமையாக கண்டித்தது. மேலும் மாநில அரசு சேதம் தொடர்பாகவும், நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாணைக்கு வந்தபோது, பினராயி அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், வன்முறை தொடர்பாக 1500 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், பிஎஃப்ஐ அமைப்பினரால் 71 அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், 11 ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகவும் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிடம் இருந்து இழப்பீடாக ரூ. 5.06 கோடியும் கேட்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.